அர்ஜென்டினாவின் மென்டோசா (Mendoza) மாகாணத்தில் உள்ள கார்டிலெரா டெல் டிக்ரே (Cordillera del Tigre) மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டருக்கும் (10,000 அடி) அதிகமான உயரத்தில் அமைந்த பிரம்மாண்ட கல் அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 27 முதல் 35 மீட்டர் விட்டம் கொண்ட பல பெரிய வட்ட வடிவக் கல் சுவர்களும், அவற்ற இணைக்கும் பாதைகளும் அங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் மலையேற்ற வீரரான கார்லோஸ் கோபி (Carlos Gobbi) செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் இதைக் கண்டறிந்து, கடினமான பயணத்திற்குப் பின் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளார்.
விண்ணில் இருந்து பார்க்கும் போது பெரு நாட்டின் புகழ்பெற்ற நாஸ்கா கோடுகளைப் (Nazca Lines) போன்று காட்சியளிக்கும் இந்த அமைப்பு, நிலப்பரப்பில் தனித்துவமான வடிவியல் அமைப்பாகக் காணப்படுகிறது. குடிநீர் வசதியோ அல்லது நிரந்தர மனித வாழ்விடத்திற்கான சான்றுகளோ இல்லாத மிகக் கடினமான உயரமான பகுதியில், இத்தகைய பிரம்மாண்ட கட்டமைப்புகள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பது இன்னும் புதிராகவே உள்ளது. பானை ஓடுகள் அல்லது உணவு எச்சங்கள் ஏதும் கிடைக்காததால், இவை வழிபாட்டுத் தலங்களாகவோ அல்லது சடங்குகள் சார்ந்த இடங்களாகவோ இருந்திருக்கலாம் என முதற்கட்டமாகக் கருதப்படுகிறது.
மென்டோசா தொல்பொருள் வரலாற்றில் இதுவரை இதுபோன்றதொரு கண்டுபிடிப்பு பதிவானதில்லை என அர்ஜென்டினாவின் ‘ஐயானிக்லா-கான்செட்’ (IANIGLA-CONICET) அமைப்பின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கல் வட்டங்கள் இன்கா (Inca) நாகரிக காலத்தைச் சேர்ந்தவையா அல்லது அதற்கு முந்தைய பழங்கால மனிதர்களால் உருவாக்கப்பட்டவையா என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை எனப் ஸ்பெயின் நாட்டின் ஜெயின் பல்கலைக்கழக (University of Jaén) வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தற்போது அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் கூட்டு ஆய்வுக் குழுவான ‘ஆர்க்கியோஆண்டிஸ்’ (ArqueoAndes) திட்டத்தின் கீழ் இந்த இடம் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு நேரடியாகச் சென்று மண் மாதிரிகள் மற்றும் தாவர எச்சங்களை நுண்ணிய அளவில் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.