ஸ்காட்லாந்தின் வடமேற்கு கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் ‘அட்லாண்டிக் தண்டர் 2026’ (Atlantic Thunder 2026) என்ற கூட்டு ராணுவப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அமெரிக்கக் கடற்படையின் சேவையில் இருந்து விலக்கப்பட்ட ‘யுஎஸ்எஸ் கிளாக்ரிங்’ (USS Klakring) என்ற பழைய போர்க்கப்பல் இலக்காகப் பயன்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதல் திறனைப் பரிசோதிக்கும் நோக்கில் இந்த நேரடிப் போர்ப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியின் போது பிரிட்டன் கடற்படையின் ‘ஹெச்.எம்.எஸ் போர்ட்லேண்ட்’ (HMS Portland) போர்க்கப்பலில் இருந்து அதிநவீன ‘நேவல் ஸ்டிரைக் மிஸைல்’ (Naval Strike Missile) ஏவுகணை முதன்முறையாக வெற்றி கரமாகப் பாய்ச்சப்பட்டது. மேலும், வைல்ட்காட் ஹெலிகாப்டரில் இருந்து ‘சீ வெனம்’ (Sea Venom) ஏவுகணையும், அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் இருந்து எஸ்.எம்-6 ஏவுகணையும் இலக்கைத் தாக்கி அழித்தன. இறுதியாக அமெரிக்காவின் விர்ஜீனியா ரக நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட எம்.கே 48 நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை (Torpedo) போர்க்கப்பலை முழுமையாக மூழ்கடித்ததாக ‘பிரேக்கிங் டிஃபென்ஸ்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கூட்டுப் படைகளின் தாக்குதல் திறன் மற்றும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பை உறுதி செய்ய இந்த நேரடிப் பயிற்சி பெரும் உதவியாக இருந்ததாகக் கூட்டுப் பணிக்குழுவின் தளபதி கெலேச்சி என்டுகவே தெரிவித்துள்ளார். எதிரி படைகளுக்குத் தங்களது ஒருங்கிணைந்த கடற்படை பலத்தை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்ததாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.