உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோவில் உண்டியல் நன்கொடைப் பணம் திருடப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) தனது பிரம்மாண்டமான 70,000 பக்கக் குற்றப்பத்திரிகையை அயோத்தி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு பக்தர்கள் செலுத்திய நன்கொடைப் பணத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் லக்னோ மண்டல டிஐஜி கிரண் எஸ் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக் குழு கடந்த 90 நாட்களாகக் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள், வங்கி ஆவணங்கள், தடயவியல் தணிக்கை மற்றும் 190 சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தியது.
இதில், கோவிலின் உண்டியல் பணம் மற்றும் காணிக்கைகளை எண்ணும் மையத்தில் (PFC Building) பணிபுரிந்த ஊழியர்கள் 105 முறை பணத்தைத் திருடியது சிசிடிவி காட்சிகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா, டின்னு யாதவ் உள்ளிட்ட 8 ஊழியர்கள் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் ரொக்கமும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இவ்வழக்கில் தொடக்கத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகள் சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோருக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் எஸ்டிஐ குழு முழுமையான ‘கிளீன் சிட்’ (Clean Chit) வழங்கி, அவர்களை அரசுத் தரப்புச் சாட்சிகளாகச் சேர்த்துள்ளது. எண்ணப்பட்டப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்றும், கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் 800-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்கப் பொருட்களில் எவ்விதக் குறைபாடும் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.