மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றியமைக்கும் என்பது குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மனிதர்களை விட விரைவாகவும், குறைந்த செலவிலும், துல்லியமாகவும் AI செயல்படுவதால் பெரும்பாலான துறைகளில் மனித உழைப்பின் தேவை குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் ‘மனிதர்களை நீக்கிவிட்டு ரோபோக்களைப் பணிக்கு அமர்த்தும்’ சூழல் உருவாகக்கூடும் என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாடிக்கையாளர் சேவை, கணக்கியல் போன்ற அலுவலகப் பணிகள் மட்டுமின்றி, கட்டுமானப் பணி, அறுவை சிகிச்சை போன்ற உடலுழைப்பு சார்ந்த துறைகளிலும் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார். இத்தகைய தொழில்நுட்ப மாற்றம் மிகப்பெரிய பொருளாதார சவால்களை உருவாக்கும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கங்கள் AI மற்றும் ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரி விதிக்க வேண்டும் என்றும் பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், மனிதர்களுக்கே உரித்தான கலை, விளையாட்டு மற்றும் பராமரிப்பு சார்ந்த சில துறைகளை மனிதர்களுக்காகவே நாம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் இந்த இடைப்பட்ட 20 ஆண்டுகள் சவாலானதாக இருக்கும் என்றாலும், எதிர்காலத்தில் இதனால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கங்களும் நிறுவனங்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தொழிலாளர்களுக்குத் தகுந்த பயிற்சிகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.