பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பல ஐரோப்பிய இராஜதந்திரிகள் பயணித்த இராஜதந்திரச் சிறப்பு ரயில் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, போலந்து எல்லை அருகே நின்றிருந்த உக்ரைன் பயணியர் ரயிலின் என்ஜின் பகுதியை ரஷ்யாவின் ட்ரோன் தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் இரயில்வே துறை முன்கூட்டியே மேற்கொண்ட அவசரகால அட்டவணை மாற்றத்தால் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயில் முன்கூட்டியே புறப்பட்டதால், அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளதாக உக்ரைன் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கியிவில் நடைபெற்ற ‘யால்டா ஐரோப்பிய மூலோபாய மாநாட்டில்’ (YES Conference) பங்கேற்றுவிட்டு, போரிஸ் ஜான்சன், ஸ்வீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் வார்சா நோக்கி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். உக்ரைனின் வோலின் பிராந்தியத்தில் உள்ள யாகோடின் (Yahodyn) ரயில் நிலையத்தில், ரஷ்ய வான்வழித் அச்சுறுத்தல் காரணமாக இந்த இராஜதந்திர ரயில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
அவர் பயணித்த ரயில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில், சரியாக அதே பாதையில் அடுத்து வந்த மற்றொரு பயணியர் ரயிலைக் குறிவைத்து ரஷ்யாவின் ட்ரோன் சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலின் உண்மையான இலக்கு போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பயணித்த ரயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும் என உக்ரைன் இரயில்வே நிறுவனமான ‘உக்ர்சாலிஸ்னிட்சியா’ (Ukrzaliznytsia) சந்தேகம் வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாகப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன், ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்கள் “அர்த்தமற்ற மற்றும் கொடூரமான செயல்” என்று கடுமையாகச் சாடியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் எல்லைக்கு வெறும் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதால், ஐரோப்பியப் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதோடு, உக்ரைனுக்கு கூடுதல் வான்வழிப் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.