அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த 9/11 தற்கொலைப்படைத் தாக்குதல்களை ‘பயங்கரவாதம்’ (Terrorism) என நேரடியாகக் குறிப்பிடக் கூடாது என்ற தனது ஊடகக் கொள்கைக்குக் கனடாவின் அரசு பொது ஊடகமான சி.பி.சி (CBC News) கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கனடா ஊடகம் அந்த விதியை அவசரமாகத் திரும்பப் பெற்றுப் பின்வாங்கியுள்ளது.
9/11 தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினம் நெருங்கி வரும் வேளையில், சி.பி.சி நிறுவனம் தனது செய்திப் பிரிவுக்கு அனுப்பிய உள்குறிப்பில், “9/11 சம்பவங்களை பயங்கரவாதத் தாக்குதல் என நேரடியாகக் குறிப்பிட வேண்டாம்; வேறு நபர்கள் அல்லது அமைப்புகள் கூறுவது போல மேற்கோள் காட்டி மட்டுமே (With Attribution) ‘பயங்கரவாதம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது கசிந்து சர்ச்சையானது.
வரலாற்றில் மிகப்பெரிய கொடூரத் தாக்குதலை வெறுமனே “விமான விபத்துக்கள்” போலச் சித்தரிக்க முயல்வதாக இந்த வழிகாட்டுதலுக்குக் கண்டனங்கள் குவிந்தன.
குறிப்பாக, அமெரிக்கக் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) இயக்குனர் காஷ் படேல், “வரலாற்றின் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களை அவமதிக்கும் செயல் இது” என ஆவேசமாகச் சாடினார்.
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியேர் பூவாலியேவ் மற்றும் அமெரிக்கத் தூதர் ஆகியோரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, உடனடியாகச் சி.பி.சி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கடும் அரசியல் மற்றும் தூதரக நெருக்கடிகள் உருவானதைத் தொடர்ந்து, சி.பி.சி செய்தித்தரத் தலைமை இயக்குநர் பாசெம் போஷ்ரா வெளியிட்ட அறிக்கையில், “9/11 வரலாற்றுச் சம்பவங்களைப் பயங்கரவாதம் எனக் குறிப்பிட இனி நேரடி மேற்கோள்கள் தேவையில்லை” எனத் தெரிவித்து அந்த விதிக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.
பொதுமக்களின் புரிதலுக்கு இடையூறாக இருந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சி.பி.சி, இருப்பினும் எதிர்காலத்தில் நடக்கும் புதிய அரசியல் அல்லது வன்முறைச் சம்பவங்களுக்கு நடுநிலையைக் காக்க ‘மேற்கோள் காட்டும்’ பழைய வழிகாட்டு முறையே தொடரும் என விளக்கமளித்துள்ளது.