Posted in

மெரினாவில் கொடூரம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதிரை ஓட்டி பிடிபட்டார்!

சென்னை மெரினா கடற்கரையில் சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வந்திருந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு, குதிரை சவாரி அழைத்துச் சென்ற சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குதிரை ஓட்டி வந்த 15 வயது சிறுவனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வார இறுதி நாளான சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலை அருகே சிறுமியின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு குதிரையுடன் நின்றுகொண்டிருந்த 15 வயது சிறுவனிடம், தங்களின் 6 வயது மகளைக் குதிரை சவாரி அழைத்துச் செல்லுமாறு பெற்றோர் கட்டணம் செலுத்தி அனுப்பியுள்ளனர். பெற்றோர் சர்வீஸ் சாலையிலேயே காத்திருந்த நிலையில், குதிரையை ஓட்டிச் சென்ற சிறுவன், வெளிச்சம் இல்லாத இருட்டான கடற்கரை பகுதிக்குச் சுமார் 400 மீட்டர் தொலைவிற்குச் சிறுமியைத் தனியாகக் கூட்டிச் சென்றுள்ளான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு குதிரை சவாரி முடிந்து திரும்பிய சிறுமி, இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் விபரம் கேட்டபோது, குதிரை சவாரி அழைத்துச் சென்ற சிறுவன் தனக்கு இருட்டில் பாலியல் அத்துமீறல் கொடுத்துக் கொடுமைப்படுத்தியதாக அந்தச் சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள், அந்தச் சிறுவனைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். அப்போது அங்கு வந்த குதிரையின் உரிமையாளர், கூட்டத்திடமிருந்து அந்தச் சிறுவனை மீட்டுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். போலீஸார் அந்தச் சிறுவனைப் பிடித்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதோடு, போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் குழந்த நலக் குழுவின் (CWC) வழிகாட்டுதலின்படி நன்னடத்தை அலுவலர் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் 6 வயது சிறுமிக்கு இத்தகைய கொடூரம் நடந்துள்ளது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.