சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறை (GCTP), பழைய மகாபலிபுரம் சாலை (OMR) மற்றும் துரைப்பாக்கம் சந்திப்பு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சென்னை மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தவும் நாளை முதல் புதிய போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பு மற்றும் ஓஎம்ஆர் பிரதான சாலையில் போக்குவரத்து சீரமைப்பை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்பாதையைப் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் (IT Employees) மற்றும் பொதுமக்கள் புதிய மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு, போக்குவரத்தின் வேகத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
புதிய போக்குவரத்து மாற்றத்தின்படி, சோழிங்கநல்லூரில் இருந்து டைடில் பார்க் நோக்கிச் செல்லும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பப்பட்டு 200 அடி ரேடியல் சாலையில் பயணித்து, சுங்கச்சாவடி அருகே ‘யு-டர்ன்’ (U-Turn) எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல, காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் BSR மாலுக்கு அருகில் இடதுபுறம் திரும்பி, பெருங்குடி பகுதி வழியாகச் சுங்கச்சாவடி ‘யு-டர்ன்’ எடுத்துத் தங்கள் இலக்குகளை அடையலாம்.
கூடுதலாக, கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திரும்பி பெருங்குடி பக்கம் அமைக்கப்பட்டுள்ள புதிய திருப்பத்தைப் பயன்படுத்திப் பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டல் பலகைகள் மற்றும் போக்குவரத்துப் காவலர்கள் அப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு பெருநகரப் போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.