தலைநகர் சென்னையின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய வரலாற்று மைல்கல்லாக, பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ‘கே.எல்.ஏ டென்கார் சாப்ட்வேர் இந்தியா’ (KLA Tencor Software India) நிறுவனம் 12 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை ரூ.1,020 கோடிக்குக் கைப்பற்றியுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் இதுவரை நடைபெற்றுள்ள ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களிலேயே இதுவே மிகப்பரிமாண்டமான நிலப் பரிவர்த்தனையாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி செமிகண்டக்டர் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான கே.எல்.ஏ கார்ப்பரேஷன் (KLA Corporation), சர்வதேச அளவிலான தனது பிரத்யேக ‘உலகளாவிய திறன் மையத்தை’ (Global Capability Centre – GCC) அமைப்பதற்காகவே இந்த பிரம்மாண்ட நிலத்தைக் வாங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தனிநபரிடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்த நிலத்தின் பரிவர்த்தனைக்கு சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனமான CBRE ஆலோசகராகச் செயல்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசுடன் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் அமைப்பதற்காக கே.எல்.ஏ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அந்தப் பிரம்மாண்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது ரேடியல் சாலையில் வாங்கப்பட்டுள்ள இந்த நிலத்தில் புதிய சர்வதேச தொழில்நுட்ப வளாகம் அமைய உள்ளதாகத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஓஎம்ஆர் (OMR) சாலை ஐடி வழித்தடமாகத் திகழும் நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தை நேரடியாக இணைக்கும் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலைப் பகுதி பிரத்யேக ‘ஜி.சி.சி காரிடாராக’ (GCC Corridor) உருவாக்கப்படும் எனத் தொழில் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக முதலீடு செய்து வருவதால், தென் சென்னையின் இந்த ரேடியல் சாலைப் பகுதி ஆசியாவின் முன்னணி தொழில் மற்றும் தொழில் நுட்ப மையமாக உருவெடுத்து வருகிறது.