புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழு மறுசீரமைப்புக் கூட்டத்தில், அறந்தாங்கி தொகுதியை தொகுதி பங்கீட்டின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகத்திற்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் இடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் வெடித்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தோல்வி மற்றும் கட்சி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அறந்தாங்கி முன்னாள் திமுக எம்.எல்.ஏ உதயம் சண்முகம், “திமுக எளிதில் வெற்றி பெறக்கூடிய அறந்தாங்கி தொகுதியை மீண்டும் மீண்டும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஏன் தூக்கிக் கொடுத்தீர்கள்?” என மேடையில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி மைக்கைப் பிடிங்க முயன்றார்.
உதயம் சண்முகத்தின் இந்தக் கேள்வியால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி உடனடியாக மேடையில் குறுக்கிட்டு அதிரடி பதிலடி கொடுத்தார். “அறந்தாங்கி தொகுதியில் கூட்டணி வேட்பாளரின் தோல்விக்கு நீதான் காரணம்; உன்னுடைய மகன்தான் தவெக வேட்பாளருடன் தெருத்தெருவாகச் சென்று விசில் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தான்” என ரகுபதி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதால் கூட்டத்தில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இரு மூத்த தலைவர்களிடையே மேடையிலேயே வார்த்தை மோதல் முற்றிய நிலையில், கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஏ.கே.எஸ்.விஜயன் தலையிட்டு உதயம் சண்முகத்தின் செயல்பாட்டை ஆவேசமாகக் கண்டித்தார். உட்கட்சிப் பூசல் மற்றும் தேர்தல் தோல்வி குறித்த மறுஆய்வுக் கூட்டத்திலேயே திமுக மூத்த நிர்வாகிகள் இருவர் வெளிப்படையாக மோதிக் கொண்ட இந்தச் சம்பவம், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் காரசார விவாதப் பொருளாக மாறியுள்ளது.