அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில், ‘அமேசான் பிரைம் ஏர்’ (Amazon Prime Air) நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்ட சரக்கு விமானம் தரை இறங்கும்போது ஓடுதளத்தைத் தாண்டிச் சென்று அருகிலிருந்த சாலை மற்றும் வாகனங்கள் மீது மோதி வெடித்துச் சிதறியதில் குறைந்தது 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர விபத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்துச் சேவைகளும் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
போர்ட்டோ ரிகோ தலைநகர் சான் ஜுவானில் இருந்து மியாமி வந்தடைந்த ’21 ஏர்’ நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 767-300 ரக சரக்கு விமானம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மியாமி விமான நிலையத்தின் குறுக்கு ஓடுதளத்தில் (Diagonal Runway) தரை இறங்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுதளத்தின் எல்லையைக் கடந்து கட்டுக்கடங்காமல் பாய்ந்த விமானம், விமான நிலைய வேலியைத் தாண்டிச் சாலையில் சென்று கொண்டிருந்த பல கார்கள் மற்றும் லாரிகள் மீது பலத்த சத்தத்துடன் மோதியது.
மோதிய அடுத்த நொடியே விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கருப்புகைப் மண்டலம் சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் விமான ஊழியர்களா அல்லது வாகனங்களில் பயணித்தவர்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர விபத்தால் அமெரிக்காவின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றான மியாமி விமான நிலையத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யமற்றும் தாமதப்படுத்தப்பட்டு முடங்கின. விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வானிலை காரணம் குறித்துப் போர்க்கால அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.