Posted in

முதியோர் இல்லத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ! – 16 பேர் பரிதாப பலி.. சிலியில் சோகம்!

சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அரௌக்கானியா (Araucanía) பிராந்தியத்தின் பிட்ரூஃப்கேன் (Pitrufquén) நகருக்கு அருகே உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி குறைந்தது 16 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில், முதியோர் இல்லத்தின் கூரைப்பகுதியில் இருந்து திடீரென மாபெரும் தீப்பிளம்புகள் எழும்பத் தொடங்கின. மரக் கட்டுமானங்களைக் கொண்ட கட்டடம் என்பதால், தீ வினாடிகளில் முதியோர் இல்லத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதிவேகமாகப் பரவியது. இரவு நேரத்தில் முதியவர்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததால், தப்பியோட இயலாமல் கட்டடத்திற்குள்ளேயே பலர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்புப் படைகளும் மீட்புக் குழுவினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மொத்தமிருந்த 26 பேரில் 10 முதியவர்கள் மட்டுமே தீயணைப்பு வீரர்களால் காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், எஞ்சிய 16 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாக அரௌக்கானியா பிராந்திய காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தீ விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து மீட்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிட்ரூஃப்கேன் நகரின் மேயர் ஜாக்குலின் ரொமேரோ சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட இந்த மாபெரும் தீ விபத்துச் சம்பவம் சிலி நாட்டில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.