Posted in

மனித வல்லுநர்கள் 2 ஆண்டாகக் கண்டுபிடிக்காத பிழை! வெறும் 60 மணி நேரத்தில் கண்டுபிடித்த ‘க்ளாட் மைத்தோஸ்’ AI!

சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் முன்னணி நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) உருவாக்கியுள்ள தனது அதிநவீன ‘க்ளாட் மைத்தோஸ்’ (Claude Mythos) என்ற மாடல், தகவல் பாதுகாப்புத் துறையில் (Cryptography) பெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்த AI மாடல் வெறும் 60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்காலக் குவாண்டம் கணினிகளின் அச்சுறுத்தலில் இருந்து டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டு, அமெரிக்கத் தேசியத் தரநிலை அமைப்பால் (NIST) பரிசீலிக்கப்பட்டு வந்த ‘HAWK’ என்ற டிஜிட்டல் கையொப்ப அமைப்பிலேயே இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித வல்லுநர்கள் இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகும் இதைக் கவனிக்காத நிலையில், ‘க்ளாட் மைத்தோஸ்’ இதன் உள் அமைப்பில் இருந்த கணிதச் சமச்சீர்மையைக் (Mathematical Symmetry) கண்டறிந்து, அதன் பாதுகாப்புக் குறியீட்டின் வலிமையை பாதியாகக் குறைத்துக் காட்டியுள்ளது.

மேலும், இணைய வங்கிச் சேவைகள் மற்றும் தகவல்தொடர்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் AES-128 குறியீட்டு அமைப்பிலும் ‘மோபியஸ் பிரிட்ஜ்’ (Möbius Bridge) என்ற புதிய தாக்குதல் நுட்பத்தை இந்த AI மாடல் சுயமாக உருவாக்கியுள்ளது. தொடக்கத்தில் “இந்த வேலையைச் செய்ய முடியாது” என மறுத்த AI, ஆராய்ச்சியாளர்களின் தொடர் வழிகாட்டலுக்குப் பிறகு சுமார் 100 கோடி டோக்கன்களைப் (Tokens) பயன்படுத்திச் சுயமாகச் சிந்தித்து இந்த புதிய கணிதத் தாக்குதல் முறையைக் கண்டறிந்துள்ளது.

தற்போது இந்த பிழைகள் கண்டறியப்பட்ட HAWK அமைப்பு பயன்பாட்டில் இல்லாததாலும், AES-128 சோதனைக் பதிப்பிலேயே ஆய்வு செய்யப்பட்டதாலும் நடைமுறையில் உள்ள இணைய வங்கி அல்லது பொதுமக்களின் தகவல்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என ஆந்த்ரோபிக் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், மனித சங்கேத வல்லுநர்களால் பல ஆண்டுகள் கண்டறிய முடியாத சிக்கலான கணிதக் குறைபாடுகளை AI மாடல்கள் சில மணி நேரங்களில் கண்டுபிடிப்பது, எதிர்காலத் தகவல்தொடர்பு பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகவும், அதேசமயம் சவாலாகவும் பார்க்கப்படுகிறது.