Posted in

முதல்வர் விஜய் பேசிய வார்த்தை.. உடனே கையெடுத்து கும்பிட்ட உதயநிதி ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 19, 2026) தனது முதல் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீர் உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் மனதார வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முந்தைய திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த தொடர் சட்டப் போராட்டங்களையும், பிரதமருக்கு அனுப்பிய கடிதங்களையும் அவையில் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தத் தீர்மானத்தில் சில முக்கிய திருத்தங்களையும், கருத்துகளையும் சேர்க்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்த தமிழக எம்.எல்.ஏ-க்களும் ஒரு குழுவாகச் சென்று ஒன்றிய அரசிடம் இந்தத் தீர்மானத்தை நேரில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உரையைத் தொடர்ந்து உடனடியாகப் பேசிய முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார். மேகதாது விவகாரத்தில் பிரத்தியேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, ஏற்கனவே தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் விளக்கமளித்தார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தினை இந்த அரசின் தனித் தீர்மானத்தின் நான்காவது பத்திக்கு அடுத்து கூடுதலாகச் சேர்க்கலாம்” என மாண்புமிகு பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களிடம் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சரின் இந்தத் துரிதமான மற்றும் இணக்கமான அறிவிப்பைக் கேட்டவுடன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் உடனே தனது இரு கரங்களைக் கூப்பி முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்த நிலையில், முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த இந்தத் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஆரோக்கியமான அரசியல் நாகரிகம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.