காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத் தேவைகளுக்காக, மேட்டூர் அணையில் இருந்து 93-வது ஆண்டாக நீரினைத் திறந்து வைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சேலம் மேட்டூருக்கு நேரில் வருகை தந்துள்ளார். வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்படும் நிலையில், நடப்பு ஆண்டில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தாமதமான சூழலில், கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியதை அடுத்து முதலமைச்சர் இத்திறப்பு நிகழ்வை நேரில் தொடங்கி வைத்துள்ளார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்து வைக்க வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பிலும் பொதுமக்களின் சார்பிலும் சேலம் விமான நிலையம் முதல் மேட்டூர் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சரின் வருகையையொட்டி மேச்சேரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் அணை வளாகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தண்ணீரைத் திறந்து வைத்த கையோடு, மேட்டூர் அணையின் முக்கியப் பகுதிகளான சுரங்க மின்நிலையம், அணை மின்நிலையம் மற்றும் ஏழு கதவணைகளில் நடைபெற்று வரும் மின் உற்பத்திச் செயல்பாடுகளையும் முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடக்கமாக வினாடிக்கு 3,000 முதல் 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, பாசனத் தேவைகள் மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து அதன் அளவு படிப்படியாக 12,000 கனஅடி வரை உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர் திறப்பு மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு சம்பா சாகுபடிக்காகக் காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.