தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 4,765 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மற்றும் உணர்வுப்பூர்வமான இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. இதனை ஏற்ற முதலமைச்சர் விஜய், தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி அத்தகைய கடைகளைப் பட்டியலிட உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் 276 கடைகளும், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 186 கடைகளும், பேருந்து நிலையங்களுக்கு மிக அருகில் 255 கடைகளும் இருப்பது கண்டறியப்பட்டது.
மொத்தம் கண்டறியப்பட்ட இந்த 717 டாஸ்மாக் கடைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிரந்தரமாக மூட வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் இன்று காலை உத்தரவிட்டார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 500 மீட்டருக்குள் இத்தகைய இடங்கள் அமைந்திருக்கும் கடைகளை அகற்ற முதல்வர் விஜய் காட்டியுள்ள வேகம், மதுவிலக்குக் கொள்கையில் அவரது அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தது. அதன் முதற்கட்டமாக, சட்டவிதிகளுக்குப் புறம்பாக மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றுவதன் மூலம் தனது நிர்வாகத் திறமையை விஜய் நிரூபித்து வருகிறார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, குறிப்பாகப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தியும் அகற்றப்படாத கடைகள், தற்போது முதல்வரின் ஒரே உத்தரவில் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.
கோட்டையில் தனது பணிகளைத் தொடங்கிய இரண்டாம் நாளிலேயே இத்தகைய முக்கிய முடிவை எடுத்துள்ள விஜய், டாஸ்மாக் வருவாயை விட மக்கள் நலனே முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளார். கடைகளை மூடுவது மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், விற்பனை நேரத்தைக் குறைப்பது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றங்கள், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுவிலக்கு தொடர்பான கூடுதல் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.