Posted in

100 நாட்கள் சாதனை ரிப்போர்ட்! – தவெக அரசு அடைந்த இலக்குகள் என்ன? மாஸ்டர் பிளான் போடும் முதல்வர் விஜய்!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடையவுள்ள சூழலில், கடந்த 100 நாட்களில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தயாரிக்குமாறு அரசுத் துறைகளுக்கு முதல்வர் தலைமைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது. மே 10 அன்று தமிழக முதலமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், “லஞ்சமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே அரசின் முதன்மை இலக்கு” எனப் பிரகடனம் செய்திருந்தார்.

அதன்படி, ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்தே லஞ்சத்திற்கு எதிராகப் பொதுமக்கள் நேரடியாகப் புகாரளிக்கச் சிறப்பு வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், பெண்கள் பாதுகாப்பிற்காகச் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை உருவாக்கம், 200 யூனிட் இலவச மின்சாரம், 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடல், கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி எனத் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளைத் தவெக அரசு முன்னெடுத்துள்ளது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் பட்ஜெட்டில், ‘அண்ணன் சீர் திட்டத்தின்க கீழ் திருமணத்திற்கு 1 சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுச்சேலை, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட திட்டங்களில் எவை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியலும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.

வரவிருக்கும் 100-வது நாள் நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தவெக அரசின் சாதனை விளம்பரப் பிரச்சாரங்களை முன்னெடுக்கவும், அடுத்த கட்டமாக எஞ்சியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ‘மாஸ்டர் பிளான்’ உத்திகளை வகுக்கவும் முதல்வர் விஜய் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.