சென்னை: தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாட்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் தி.மு.க. முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, 2026-ஆம் ஆண்டிற்கான கழக விருதுகளைப் பெறும் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளின் அதிகாரப்பூர்வப் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
திராவிட இயக்க வளர்ச்சிக்காக நீண்டகாலமாகப் பங்காற்றி வரும் கழகத்தின் முக்கியப் நிர்வாகிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டிற்கான பெரியார் விருது விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பாவிற்கும், அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ் அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
அதேபோல், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்.பி-க்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அணித் தலைவரும் முன்னாள் எம்பி-யுமான டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமுவுக்கு பாவேந்தர் விருது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பிக்கு பேராசிரியர் விருது, மற்றும் இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
வருகிற செப்டம்பர் 15 அன்று நடைபெறும் பிரம்மாண்ட முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விருது பெறுபவர்களுக்கு தங்கப் பொற்கிழி மற்றும் பொன்னாடை போர்த்தி விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ள தி.மு.க. தொண்டர்களுக்கு இந்த முப்பெரும் விழா மாபெரும் உற்சாகத்தையும் புதுத் தெம்பையும் அளிப்பதாக அமையும் என எதிர்பார்ப்பதாகக் கழக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.