Posted in

குடும்பத் தகராறால் 200 மைல் பயணம் செய்து இளைஞர் படுகொலை: ஆப்கான் அகதிக்குச் சிறை தண்டனை!

குடும்பத் தகராறு மற்றும் பழிவாங்கும் நோக்கில் சுமார் 200 மைல் தூரம் பயணம் செய்து, லண்டனில் கடை ஊழியர் ஒருவரை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதி சுலைமான் தஜாய் (18) என்பவருக்குப் பிரித்தானிய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது நீண்டகாலச் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியில் வசித்து வந்த 18 வயதான ஆப்கானிய அகதி சுலைமான் தஜாய், சிறிய படகு மூலமாக பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வந்தடைந் தவர் ஆவார். லண்டனில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்த ஃபர்மனுல்லா ஷெர்சாத் (26) என்பவருக்கும், குற்றவாளியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே தகராறு மற்றும் குடும்பச் சிக்கல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி, ஷெர்சாத்தைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காகத் திட்டமிட்டு கத்தியை விலைக்கு வாங்கிய சுலைமான் தஜாய், லீட்ஸ் நகரிலிருந்து 200 மைல் தூரத்திலுள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு நேரில் சென்றுள்ளார். அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் வைத்து ஷெர்சாட்டை வழிமறித்த குற்றவாளி, அவரை விரட்டிச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஷெர்சாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அவர் திட்டமிட்டே இந்த கொடூரக் கொலையைச் செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தகுந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.