மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் (DRC) கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இத்துரி (Ituri) மாகாணத்தில் எபோலா வைரஸ் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) இதனைச் சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ள சூழலில், அங்குள்ள ரவாம்பரா (Rwampara) பொது மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள எபோலா சிகிச்சை மையத்தை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அதிரடியாகத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். எபோலா பாதிப்பால் உயிரிழந்த ஒரு இளைஞரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவப் பணியாளர்கள் மறுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல், இந்த வன்முறையாக வெடித்துள்ளது.
சிகிச்சை மையத்தில் வைக்கப்பட்டிருந்த தங்களது உறவினரின் உடலை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு எடுத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய அக்குடும்பத்தினரும் நண்பர்களும் முயன்றுள்ளனர். ஆனால், எபோலா விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைப் பாதுகாப்பான முறையில் அதிகாரிகளே அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், மருத்துவ முகாம்களின் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியதுடன், நோயாளிகள் தங்கியிருந்த மருத்துவக் கூடாரங்களுக்கும் தீவைத்தனர்.
இந்தத் தீவைப்பு சம்பவத்தின் போது எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 6 நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கிருந்த சர்வதேச மருத்துவ உதவி அமைப்பான ‘அலிமா’ (ALIMA) ஊழியர்கள் வாகனங்களில் ஏறி உயிர் தப்பினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் எச்சரித்த போதிலும், போராட்டக்காரர்கள் அங்கிருந்த மருத்துவப் படுக்கைகள் மற்றும் முக்கியப் பொருட்களை முழுமையாக எரித்து சாம்பலாக்கினர்.
காங்கோவில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் ‘புந்திபுகியோ’ (Bundibugyo) எனப்படும் மிகவும் அரிய மற்றும் ஆபத்தான வகையைச் சேர்ந்ததாகும்; இதற்கென பிரத்யேகத் தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் பரவி வரும் “எபோலா என்பது ஒரு கட்டுக்கதை” போன்ற போலிச் செய்திகளை நம்பி மக்கள் இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவது கவலையளிப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்துரி மாகாணத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 139-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வன்முறை எபோலா தடுப்புப் பணிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.