சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நீண்டகாலப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் பதவி விலகியதைத் தொடர்ந்து, சென்னை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்படலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரா் மேத்யூ ஹெய்டன் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், “தினேஷ் கார்த்திக் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கும் முன் இரண்டு முறை நன்றாக யோசிக்க வேண்டும்” என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் எச்சரிக்கும் விதமாக அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராகச் செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக், அந்த அணியின் வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இது குறித்துத் தனது யூடியூப் தளத்தில் பேசிய பத்ரிநாத், “நான் தினேஷ் கார்த்திக்காக இருந்தால், ஆர்சிபி அணியிலேயே தொடரவே விரும்புவேன்; ஏனெனில் அங்கு அவருக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது மற்றும் வீரர்கள் அனைவரும் மிகச்சிறந்த பார்மில் உள்ளனர். ஆர்சிபி அணியைக் கடினமான சூழலில் இருந்து கட்டமைக்க அவர் ஆற்றிய உழைப்பின் பலனை அறுவடை செய்ய வேண்டிய தருணம் இது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஒரு பெரும் அணியைப் பயிற்றுவிப்பதில் சவால்களும் எதிர்பார்ப்புகளின் அழுத்தமும் மிக அதிகம் என தெரிவித்த பத்ரிநாத், ஆர்சிபி நிர்வாகமும் அவரை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்கு உள்ளூர் பின்னணி கொண்ட ஒரு பயிற்சியாளர் தேவை என்ற ஹெய்டனின் கருத்து நியாயமானது என்றாலும், தற்போதுள்ள சூழலில் தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியிலேயே நீடிப்பதே அவரது பயிற்சிப் பயணத்திற்குச் சிறந்தது என்பது பத்ரிநாத்தின் கருத்தாக உள்ளது.
ஸ்டீபன் பிளெமிங் விலகலுக்குப் பின் சிஎஸ்கே அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரெண்டன் மெக்கல்லம், மைக் ஹஸ்ஸி, இயான் மோர்கன் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட பல சர்வதேச முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், தல தோனியின் இறுதி முடிவிற்காகச் சிஎஸ்கே நிர்வாகம் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.