Posted in

₹8 லட்ச மதிப்புள்ள டிரான்ஸ்பார்மரை ₹13 லட்சத்திற்கு வாங்கினாரா செந்தில் பாலாஜி?; சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிரடி புகார்!

தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு டெண்டர் முறைகேடுகளும், பாலிசி அளவிலான விதிமீறல்களும் நடைபெற்றுள்ளதாகத் தமிழக மின்சார வாரியத்தின் தற்போதைய முக்கியப் பொறுப்பாளரும் அரசியல் பிரமுகருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பதவியில் இருந்த காலகட்டத்தில், வெறும் 7 முதல் 8 லட்சம் ரூபாய் மட்டுமே சந்தை மதிப்பு கொண்ட மின்மாற்றிகள் (Transformers) சுமார் 13 லட்சம் ரூபாய்க்கு மிகக் கூடுதல் விலைக்கு டெண்டர் கோரப்பட்டு வாங்கப்பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவலை உடைத்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் அண்மைய பேட்டிக்குக் கண்டனம் தெரிவித்துப் பேசிய நிர்மல் குமார், “டெண்டர்களை வாரியம் தான் அப்ரூவ் செய்தது என்று செந்தில் பாலாஜி தப்பிக்கப் பார்க்கிறார்; ஆனால் தங்களுக்குச் சாதகமான நான்கு பேரை வாரியத்தில் உட்கார வைத்து அவர்களையே அப்ரூவ் செய்யச் சொன்னால் செய்யாமல் இருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த டெண்டர் எஸ்டிமேஷனில் (Tender Estimation) நடைபெற்ற இமாலய முறைகேடு காரணமாகவே இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று, தற்போது சிபிஐ (CBI) விசாரணை வரை சென்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிரான்ஸ்பார்மர் மட்டுமின்றி, சோலார் மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி கொள்முதலிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புரோக்கர்கள் ராஜ்ஜியம் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். சோலார் மின்சாரம் தொடங்க அப்ளிகேஷன் கொடுத்தால் எங்குமே வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஒரு மெகாவாட் ஒதுக்கீட்டிற்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை புரோக்கர்களுக்குக் கமிஷன் கொடுத்தால் மட்டுமே பணிகள் நகர்ந்ததாகவும், செந்தில் பாலாஜி காலத்தில் இந்தத் துறை முற்றிலும் சீரழிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் 2000 பேரை அக்யூஸ்டாகச் சேர்த்து இந்த வழக்கை முடிக்க இன்னும் 600 ஆண்டுகள் ஆகும் என உச்ச நீதிமன்றமே இவர்களைக் கண்டித்துள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

கடந்த காலங்களில் மார்க்கெட் ரேட் மற்றும் மேனுபேக்சரர் ரேட் எதையுமே பார்க்காமல் புரோக்கர் நிறுவனங்களின் கொட்டேஷனை வைத்து எஸ்டிமேஷன் பாலிசி தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட நிர்மல் குமார், தற்போது இந்த டெண்டர் எஸ்டிமேஷன் பாலிசி முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இனிமேல் சோலார் மற்றும் ஆஷ் (Ash) விற்பனையில் புரோக்கர்கள் தலையீடு இன்றி யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் வெளிப்படையாக விண்ணப்பிக்கும் வகையில் புதிய இணையதளம் (Website) விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், மின்சாரத் துறையில் செய்யப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்தங்கள் குறித்தும் வரிவிடாமல் விரைவில் அதிகாரப்பூர்வமாகப் பப்ளிஷ் செய்ய உள்ளோம் என்றும் அவர் உறுதியளித்தார்.