Posted in

 முதல்வர் விஜய் சைகை காட்டிய விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி !

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரை மற்றும் அதைத் தொடர்ந்து அவர் காட்டிய  சைகை பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இச்சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், “முதலமைச்சர் விஜய் நடந்து கொண்ட விதத்தில் சட்டமன்ற விதிமீறல்கள் எதுவுமில்லை; பேரவையின் கண்ணியத்திற்குக் எவ்விதக் களங்கமும் ஏற்படவில்லை” எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களிடம் அதிரடியாக விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், உரை நிறைவில் ‘குட்டி கதை’ ஒன்றைக்கூறி சுவாரசியமாகப் பேசி முடித்தார். அதைத் தொடர்ந்து, சபாநாயகரிடம் அனுமதி பெற்றுத் தனது உரையை நிறைவு செய்யும் போது, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாணியிலான கையசைவு சைகை ஒன்றைச் செய்து உரையை முடித்தார். இச்சம்பவம் சட்டமன்றத்திற்குள்ளும் சமூக வலைதளங்களிலும் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற போதிலும், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீடபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள், முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்றும், பேரவைக்கு வெளியே பேச வேண்டிய கருத்துக்களையும் சைகைகளையும் சட்டமன்றத்திற்குள் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் விமர்சித்திருந்தனர். அவையின் மரபுகளை உயர்த்த பிடிக்குமாறு அவர்கள் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விமர்சனங்கள் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “சட்டமன்ற விதிகள் மற்றும் மரபுகளை உட்படுத்தியே அவையின் நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன” என்றார். “முதல்வர் விஜய் தனது கருத்தைப் பதிவு செய்த விதத்திலோ அல்லது காட்டிய சைகையிலோ பேரவை மரபை மீறும் வகையில் எதுவுமில்லை; ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டே அனைவரும் நடந்துகொண்டனர்” எனத் தெளிவுபடுத்தியதன் மூலம், கடந்த சில நாட்களாக சட்டமன்றத்தில் நீடித்து வந்த இந்த காரசாரமான விவாதத்திற்குச் சபாநாயகர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.