Posted in

தாராபுரத்தில் தவெக வெற்றி உறுதி – அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் எனச் சத்யபாமா நம்பிக்கை!

வரவிருக்கும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்தமுறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதை முதலமைச்சர் விஜய்யின் பாதங்களில் காணிக்கையாக்குவேன் என்றும் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்பி மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த பி. சத்யபாமாவுக்கு, அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடத் தவெக தலைமை மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நேர்மையான தலைமையும், தவெக அரசின் மக்கள் நலச் செயல்பாடுகளும் மக்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த பட்டா கோரிக்கைகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தவெக அரசு உடனுக்குடன் தீர்த்து வைப்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், உப்பார் அணை விவசாயிகளின் பாசன நீர் பிரச்சனை மற்றும் புதிய பேருந்து நிலையத் திட்டத் தாமதங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம் என்றும், தவெக ஆட்சியில் இப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய சத்யபாமா, தவெக அரசு நடத்தி வரும் சிறப்பான ஆட்சியின் காரணமாக இந்த இடைத்தேர்தலில் அதைவிடப் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை எட்டி வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். தவெக சார்பில் சத்யபாமாவும், திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யாவும் களமிறங்கியுள்ளதால் தாராபுரம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.