தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தரக்குறைவாகப் பேசியதுடன், அவருக்கு மறைமுகக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்குத் திரண்ட ஆதரவாளர்களிடையே பேசுகையில் இவர் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இக்காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், தலைமறைவாக இருந்த அவரைப் புழல் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
சரவணன் பேசிய காணொளியின் அடிப்படையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், குற்றவியல் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்கச் அமைக்கப்பட்ட மூன்று தனிப்படைக் காவல்துறையினர், விழுப்புரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை புதன்கிழமை அதிகாலை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணனைச் சென்னைக்கு அழைத்து வந்து மேல்விசாரணை நடத்தக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முதலமைச்சருக்கு எதிராகச் சர்ச்சைப் பேச்சை முன்வைத்த திமுக கவுன்சிலர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீவிர நடவடிக்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினர் இத்தகைய மிரட்டல் பேச்சுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இக்கைது நிகழ்ந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள டீட்டா சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளைப் புழல் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரு கட்சியினரிடையே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் கடலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.