ஸ்பெயின் நாட்டின் பாஸ்க் பிராந்தியத்தில் உள்ள பில்பாவோ (Bilbao) நகரில் திங்கள்கிழமை இரவு திடீரென வீதி வன்முறை வெடித்தது. முகமூடி அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டதுடன், வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், காவல் துறை இருசக்கர வாகனம் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 19 பேரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வலதுசாரி அரசியல் விமர்சகரான விட்டோ கிலெஸ் (Vito Quiles) என்பவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டியூஸ்டோ பல்கலைக்கழகம் (Deusto University) அருகே மாணவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர். போராட்டம் நிறைவடைந்த பின்னர், முகமூடி அணிந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தி சொத்துகளைச் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளை அடித்து நொறுக்கியதுடன், தீ வைப்புச் சம்பவங்களிலும் ஈடுபட்ட இந்த அமைதியின்மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் காவல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிராந்தியத் தலைவர் இமானோல் பிரடேல்ஸ் (Imanol Pradales) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தூண்டுதல்களுக்குப் பதிலளிக்க வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் பாஸ்க் பிராந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பின்ஜென் சுபிரியா, இந்த வன்முறைத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையில் ஈடுபட்ட மற்ற நபர்களை அடையாளம் காணும் பணிகளில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் நாட்களில் மீண்டும் போராட்டங்கள் நடத்த இணையவழியில் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதால் பில்பாவோ நகரில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.