Posted in

வானில் பயங்கரம்! ஈஸிஜெட் விமானத்தைத் தாக்கிய மின்னல்; லண்டனில் அவசர அவசரமாகத் தரை இறக்கம்!

லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்திலிருந்து மே 14, 2026 அன்று மதியம் 2:22 மணிக்கு இத்தாலியின் மிலன் நகருக்கு ஈஸிஜெட் நிறுவனத்தின் U28305 விமானம் புறப்பட்டது. ஏர்பஸ் A319 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் மேகங்களுக்கு இடையே மேலே ஏறிக்கொண்டிருந்தபோது, அங்கு நிலவிய கடும் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழையால் திடீரென மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கிய அடுத்த சில வினாடிகளில் விமானத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டதோடு, பிரகாசமான ஒளியும் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.

மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து, விமானிகள் உடனடியாக பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றினர். சுமார் 16,000 அடி உயரத்தில் விமானத்தைச் சமநிலைப்படுத்திய அவர்கள், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்த்தனர். பின்னர், பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் லண்டனுக்கே திருப்ப முடிவு செய்து, அவசரக் கால தரை இறக்கத்திற்கு (Emergency Landing) அனுமதி கோரினர். விமானம் புறப்பட்ட 27 நிமிடங்களிலேயே, அதாவது மதியம் 2:49 மணிக்கு மீண்டும் கேட்விக் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாகத் தரை இறங்கியது.

இது குறித்து ஈஸிஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்னல் தாக்குதல் என்பது விமானப் போக்குவரத்தில் ஒரு வழக்கமான நிகழ்வுதான். நவீன விமானங்கள் மின்னல் தாக்குதலைத் தாங்கும் வகையில் ‘ஃபாரடே கேஜ்’ (Faraday Cage) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. தரை இறக்கப்பட்ட விமானத்தை அவசரக் கால மீட்புக் குழுவினர் ஆய்வு செய்ததோடு, பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மின்னல் தாக்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வானில் சீறிப்பாய்ந்த ஒரு பெரிய மின்னல் கோடு, விமானத்தைத் நேரடியாகத் தாக்குவது போன்ற காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன. பொதுவாக ஒரு வணிக ரீதியான விமானம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தில் விமானிகளின் துரிதமான செயல்பாடும், விமானத்தின் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளும் ஒரு பெரும் விபத்தைத் தவிர்த்துள்ளன.