உக்ரைன் உடனான போர் உச்சத்தில் இருக்கும் நிலையிலேயே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது கடற்படை பலத்தைப் பெருமளவில் திரட்டி பல்வேறு மூலோபாயப் கடற்பகுதிகளில்போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் களமிறக்கி வருவதாகச் சர்வதேசக் உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்துள்ளன. ரஷ்யா இன்னும் சில வாரங்களில் நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் மீது நேரடித் தாக்குதல் அல்லது கடுமையான அச்சுறுத்தல்களைத் தொடுக்கக் கூடும் என மேலைநாட்டுப் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்டிக் கடல் மற்றும் வட கடல் பகுதிகளில் ரஷ்யா தனது ‘நிழல் கப்பற்படை’ (Shadow fleet) மற்றும் இராணுவக் கப்பல்களின் நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. சர்வதேச கடலடி தகவல் தொடர்பு கேபிள்கள், எரிவாயுக் குழாய்கள் மற்றும் வர்த்தகப் பாதைகளைக் இலக்கு வைத்து ரஷ்யா மறைமுகக் ‘ஹைப்ரிட்’ (Hybrid Warfare) போர் உத்திகளைக் கையாண்டு வருவதாக நேட்டோ படைகள் குற்றம்சாட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்பகுதிக்கு மிக அருகில் ரஷ்ய போர்க்கப்பல்கள் பயிற்சிகளை மேற்கொண்டு அச்சுறுத்தி வருகின்றன.
ரஷ்யாவின் இந்தத் திடீர் கடற்படைத் திரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நேட்டோ அமைப்பும் தனது பலத்தைக் கூட்டத் தொடங்கியுள்ளது. ஐரோப்பியப் பிராந்தியத்திலும் பலடிக் எல்லைகளிலும் நேட்டோ படைகள் தங்களது கண்காணிப்பு ரோந்துப் பணிகள், போர் விமானப் பயிற்சிகள் மற்றும் போர்க்கப்பல் குழுக்களை முடுக்கி விட்டுள்ளன. இரு தரப்பிலும் அதிகரித்துவரும் இந்த ராணுவ நடவடிக்கைகள், எந்த நேரத்திலும் ஒரு நேரடி மோதலாக வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தை இராணுவ வல்லுநர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, நேட்டோ நாடுகளுடன் நேரடி மோதல் ஏற்பாட்டால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என அதிபர் புடின் எச்சரித்திருந்த நிலையில், தற்போதைய கடற்படை நகர்வுகள் வெறும் எச்சரிக்கை மட்டும்தானா அல்லது பெரிய அளவிலான தாக்குதலுக்கான ஆயத்தமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உக்ரைன் போரின் தாக்கம் இப்போது சர்வதேசக் கடல் வழிகளுக்கும் பரவியுள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் இந்த வான் மற்றும் கடல்சார் நகர்வுகளைக் கடும் கவலையுடன் கவனித்து வருகின்றன.