கடந்த ஜூலை 1 ஆம் தேதி மதிய வேளையில், எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் 103 வது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி பராமரிப்புக்கான ரகசிய கதவு வழியாக இந்த ஜோடி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் (Harness) இன்றி கட்டடத்தின் மிகக் குறுகிய டிவி மற்றும் ரேடியோ அலைபரப்பு கோபுரத்தின் (Antenna) உச்சிக்கு ஏறியுள்ளனர். அங்கு நின்றுகொண்டு, “அன்பின் சக்தி, அதிகாரத்தின் சக்தியை வெல்லும்போது உலகில் அமைதி நிலவும்” என்ற புகழ்பெற்ற வாசகம் அடங்கிய கருப்பு நிற பேனரை அவர்கள் பறக்கவிட்டனர். இந்த தற்கொலைக்கு இணையான சாகசத்தைக் கீழே இருந்த சுற்றுலாப் பயணிகளும், போலீஸ் ஹெலிகாப்டர்களும் அதிர்ச்சியுடன் கவனித்தனர்.
பேனரை விரித்த பிறகு, அந்த அலைபரப்புக் கோபுரத்தின் ஒரு குறுகிய மேடையில் இவான் பெர்கஸ் தனது முழங்காலை ஊன்றி ஏஞ்சலாவிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரத்தை அணிவித்துள்ளார். இதனை ஏஞ்சலா தனது சமூக வலைதள பக்கங்களில் நேரலையாகப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, நியூயார்க் போலீசாரின் அவசரக்கால மீட்புக்குழுவினர் (NYPD ESU) ஏணிகள் வழியாக அந்த ஆபத்தான பகுதிக்குச் சென்று அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். போலீசார் வெளியிட்ட ‘பாடில்கேம்’ (Bodycam) வீடியோவில், அதிகாரி ஒருவர் “நீங்கள் இங்கே இருக்கக் கூடாது” என்று கூற, அந்த ஜோடி மிகவும் அமைதியாக “எங்களுக்குத் திருமண நிச்சயம் ஆகிவிட்டது” என்று கூறி தங்களைச் சரணடையச் செய்துள்ளனர்.
எம்பயர் ஸ்டேட் கட்டட நிர்வாகம் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது முற்றிலும் அனுமதியற்ற ஒரு அத்துமீறல் என்று கூறியுள்ளது. முறையான பாதுகாப்பு இன்றி இவ்வளவு உயரத்தில் ஏறுவது உயிருக்கே ஆபத்தானது என்றும், இந்த ஜோடி மீது கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தது, சட்டவிரோதக் கருவிகளை வைத்திருந்தது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் மோதிரம் மாற்றிவிட்டு, கைகளில் விலங்குகளுடன் கீழே இறங்கி வந்த இந்த காதல் ஜோடியின் சாகசம் தற்பொழுது சர்வதேச அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.