Posted in

வானை பிளந்த வெடிச்சத்தம்! பிரிட்டனில் தீப்பிழம்பாக மாறிய தொழிற்சாலை

பிரிட்டனின் எசெக்ஸ் (Essex) மாகாணத்தில் உள்ள தொழிற்பேட்டை வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தின் போது, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த உரங்கள் (Fertiliser) திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே அதிர்ந்துபோனது. சௌதெண்ட் சாலையில் (Southend Road) அமைந்த ஹைலேண்ட்ஸ் ஃபார்ம் பகுதியில் வெடித்த இந்த பிரம்மாண்டத் தீப்பிழம்பும், அதைத் தொடர்ந்து எழும்பிய அடர் கருப்புகப் புகையும் பல மைல் தூரத்திற்குப் பரவியதை அடுத்து, அவசரக்கால மீட்புப் படையினர் உடனடிப் பேரழிவு மற்றும் ஆபத்தான சூழல் (Major Incident) என அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 4:50 மணியளவில் தொழிற்பேட்டைக் கட்டிடங்களில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வந்தனர். அப்போது, ஒரு கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உரம் எதிர்பாராதவிதமாக பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் எழுந்த அதிர்வலைகள் சுமார் 15 மைல் சுற்றளவிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை உலுக்கியதுடன், அணு குண்டு வெடிப்பைப் போலக் காளான் மேகம் போன்ற புகை மண்டலமும் வானில் தோன்றியதாகக் நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுக்கத் தீவிரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், ‘கிழக்கு இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சேவை’ ஆபத்தான மீட்புக் குழுக்களைக் (Hazardous Area Response Team – HART) களமிறக்கி நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

தற்போது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நல்வாய்ப்பாக இதில் எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றும் எசெக்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை உறுதி செய்துள்ளது. இருப்பினும், அப்பகுதியில் பரவி வரும் அடர் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கட்டிடங்களின் கதவு, ஜன்னல்களை மூடி வைக்குமாறும், அப்பகுதிச் சாலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.