முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுக்குத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜூன் 25-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை, திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்ட நிலையில், தற்பொழுது இந்தச் சம்மன் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகச் செயல்படும் ‘அறப்போர் இயக்கம்’ (Arappor Iyakkam) அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கூட்டுச் சதி மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள் எதுவும் அமைக்காமலேயே, சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காகத் தமிழக அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து சுமார் 3 கோடியே 23 லட்சம் ரூபாயை ‘சங்கரானந்த் இன்ஃப்ரா’ என்ற ஒப்பந்த நிறுவனத்துடன் இணைந்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர் கையாடல் செய்ததாக அந்தப் புகாரில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
விசாரணையில், திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 7 கோடி ரூபாயில், பணிகள் ஏதும் தொடங்கப்படாத நிலையிலேயே 2022 மார்ச் மாத இறுதியில் அவசர அவசரமாகப் பணம் விடுவிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. மேலும், இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததும், குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் ஏப்ரல் மாத இரவோடு இரவாகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவசர அவசரமாகச் சாலைகள் அமைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள் உள்ளிட்ட 10 அரசு அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் கோப்புகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அவர் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை அல்லது திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். புதிய அரசின் இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டைக்குத் தவெக தலைவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முழுப் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.