உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் ‘மரண மண்டலம்’ (Death Zone) என்று அழைக்கப்படும் 8,500 மீட்டர் உயரத்தில், கடந்த 30 ஆண்டுகளாக உறைந்துபோய் கிடந்த ‘க்ரீன் பூட்ஸ்’ (Green Boots) என்ற மலையேற்ற வீரரின் அடையாளம் இறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. டிஎன்ஏ (DNA) பரிசோதனை மற்றும் ஆவணப் பகுப்பாய்வு மூலம், அந்த உடல் இந்திய – திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த (ITBP) லான்ஸ் நாயக் தோர்ஜே மொரூப் (Lance Naik Dorje Morup) என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு மே 10 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் கடினமான வடகிழக்குச் சிகரப் பாதை வழியாக ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, வீசிய பனிப்புயலில் சிக்கித் தோர்ஜே மொரூப் உயிரிழந்தார். அவரது உடல் அவர் அணிந்திருந்த பிரகாசமான பச்சை நிற மலையேற்ற பூட்ஸ்கள் காரணமாக ‘க்ரீன் பூட்ஸ்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்ததுடன், எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் செல்லும் பிற மலையேற்ற வீரர்களுக்கு அது ஒரு அடையாளக் குறியீடாகவும் மாறியது. இத்தனை ஆண்டுகளாக அது மற்றொரு வீரரான சேவாங் பால்ஜோரின் உடலாக இருக்கும் என்றே பலராலும் நம்பப்பட்டு வந்தது.
தற்போது தோர்ஜே மொரூப்பின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவரது உடலை எவரெஸ்ட் சிகரத்தின் உறைபனியிலிருந்து மீட்டு லடாக் பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இந்திய அரசு மற்றும் ஐடிபிபி (ITBP) சிறப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. கடுமையான குளிர், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் பனிச்சரிவு ஆபத்துகள் நிறைந்த மரண மண்டலத்திலிருந்து உடலை கீழே கொண்டு வருவது மிகவும் அபாயகரமான பணியாகக் கருதப்படுகிறது.
இதற்காக அனுபவமிக்க ‘ஷெர்பா’ (Sherpas) குழுவினரின் உதவியுடன் ஆபத்தான மீர்ப்புப் பணி திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தச் சாகசப் பணி வெற்றியடையும் பட்சத்தில், கடந்த முப்பது ஆண்டுகளாக எவரெஸ்ட் பனிமலையில் முடங்கிக்கிடந்த இந்திய வீரரின் உடலுக்கு இறுதியாகத் தாயகத்தில் ராணுவ மரியாதையுடன் கௌரவம் செலுத்தப்பட்டு, அவரது குடும்பத்திற்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.