Posted in

திடீரென முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்; உலகளவில் தவித்த லட்சக்கணக்கான பயனர்கள்!

மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான முன்னணி சமூக ஊடக தளங்களான ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை உலகளாவிய ரீதியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் முடங்கியுள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் இந்த தளங்களை அணுக முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையதளங்களின் முடக்கத்தைக் கண்காணிக்கும் பிரபல ‘டவுன்டெக்டர்’ (Downdetector) தளத்தில், ஆயிரக்கணக்கான பயனர்கள் ஒரே நேரத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் வேலை செய்யவில்லை என்று புகார்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். குறிப்பாக, கணினி பிரவுசர்கள் (Desktop Browsers) மூலமாக ஃபேஸ்புக்கை லாக்-இன் செய்ய முயன்ற பலருக்கு, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உங்கள் கணக்கு தற்காலிகமாகக் கிடைக்கவில்லை” (Account Temporarily Unavailable) என்ற பிழைச் செய்தி (Error Message) காண்பிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் தளத்தைப் பொறுத்தவரை, அதன் மொபைல் செயலி மற்றும் இணையதளப் பக்கங்களில் புதிய பதிவுகள் அல்லது ரீல்ஸ் (Reels) வீடியோக்கள் லோட் ஆகாமல் (Refresh) பயனர்களைப் படுத்தியெடுத்துள்ளது. சிலருக்குப் பக்கங்கள் முழுமையாக வெள்ளையாக (White Screen) மாறியதாகவும், பழைய பதிவுகள் மட்டுமே திரையில் தெரிந்ததாகவும் பயனர்கள் எக்ஸ் (X) தளத்தில் தங்களது குமுறல்களைப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், மெட்டா நிறுவனத்தின் மற்றொரு முக்கிய சேவையான வாட்ஸ்அப் (WhatsApp) எந்தவிதப் பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கி வருவதாகத் தெரிகிறது.

இந்தத் திடீர் முடக்கத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சர்வர் கோளாறா அல்லது தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகளால் இந்தத் தடை ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், பயனர்கள் அவசரப்பட்டுத் தங்களின் கடவுச்சொற்களை (Passwords) மாற்றவோ அல்லது செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யவோ வேண்டாம் என்று சைபர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply