அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள நார்த் ஃபோர்ட் மையர்ஸ் (North Fort Myers) பகுதியில் சனிக்கிழமை நண்பகல் வேளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு விமானிகளுடன் பயணித்த ‘செஸ்னா 172டி ஸ்கைஹாக்’ (Cessna 172D Skyhawk) என்ற சிறிய ரகப் பயிற்சி விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி, அப்பகுதியில் இருந்த பேஷோர் ரோடு (Bayshore Road) என்ற பரபரப்பான சாலையில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானிகள் முயன்றுள்ளனர்.
விமானம் தார்ச் சாலையில் வேகமாகத் தரையிறங்கிய போது, அதே திசையில் சென்றுகொண்டிருந்த பிக்கப் டிரக் வாகனத்தின் பின்பகுதியில் பலமாக மோதிச் சறுக்கிச் சென்றது. இந்தத் திடுக்கிடும் காட்சிகள் பின்னால் வந்த வாகனங்களின் டேஷ்கேமரா மற்றும் செல்போன்களில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளுக்கும் பிக்கப் டிரக்கில் சென்ற நபருக்கும் எந்தவிதப் காயமும் ஏற்படவில்லை என லீ கவுண்டி ஷெரிப் அலுவலகம் (Lee County Sheriff’s Office) உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துப் பேசிய லீ கவுண்டி ஷெரிப் கார்மைன் மார்செனோ (Carmine Marceno), “யாருக்கும் காயம் ஏற்படாமல் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது பெரும் நிம்மதி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்க ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து, விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்தும் விபத்துக்கான பின்னணி குறித்தும் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.