Posted in

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 21 பேர் பலி

செனகல் நாட்டின் வடமேற்கு கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் வடமேற்கு கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரகப் படகு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தலைநகர் டாக்கருக்கு வடக்கே சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெபெமர் (Kébémer) பகுதிக்கு உட்பட்ட லூம்பூல் மணல் திட்டுக்கள் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடல் வழியே ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்குச் செல்ல முயன்றபோதே இத்துயரம் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள செனகல் நாட்டின் உள்துறை அமைச்சகம், இதுவரை கடலில் இருந்து 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மட்டுமே உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. படகில் பயணித்த பெரும்பாலானோர் லியோனா மற்றும் தியேப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், விபத்தின் போது படகில் மொத்தம் எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்ற துல்லியமான எண்ணிக்கை அறியப்படாததால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்ல முயல்கின்றனர். செனகல், மொரிட்டானியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் கடலோரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதால், அகதிகள் ஆபத்து நிறைந்த தெற்குப் பகுதி வழிகளைத் தேர்ந்தெடுப்பதே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த தொடர் உயிரிழப்புகள் சர்வதேச அளவில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

தற்போது செனகல் நாட்டு கடற்படை மற்றும் மீட்புக் குழுவினர் காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், சட்டவிரோதப் படகுப் பயணங்களைத் தடுப்பதற்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் செனகல் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.