Posted in

ஒரு நபருக்கு 20-30 கிராம் மட்டுமே எண்ணெய்: மத்திய அரசு அதிரடி!

இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் சமையல் எண்ணெயின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அபாயங்களைத் தவிர்க்கும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஒரு தனிநபர் நாளொன்றுக்கு 20 முதல் 30 கிராம் (சுமார் 4 முதல் 5 தேக்கரண்டி) வரை மட்டுமே சமையல் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் மற்றும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவில் அதிகளவு சமையல் எண்ணெய் மற்றும் நெய் சேர்ப்பதால், உடலில் தேவையற்ற கலோரிகள் அதிகரித்து உடல் பருமன், கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் கணிசமாக உயர்கிறது. நாம் உணவில் நேரடியாகச் சேர்க்கும் ‘புலப்படும் கொழுப்புகள்’ (Visible Fats) தவிர்த்து, பருப்பு மற்றும் கொட்டை வகைகளில் இருக்கும் இயற்கை கொழுப்புகளையும் கணக்கில் கொண்டு எண்ணெயின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என FSSAI சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வறுத்த அல்லது பொரித்த சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எண்ணெயைத் திரும்பத் திரும்பச் சூடாக்கும் போது அதில் ‘டிரான்ஸ் ஃபேட்’ (Trans Fat) மற்றும் ‘டோட்டல் போலார் காம்பவுண்ட்ஸ்’ (TPC) போன்ற நச்சுப் பொருட்கள் உருவாகி, செல்களைப் பாதித்து புற்றுநோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை உருவாக்குகின்றன.

எனவே, உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்திய எண்ணெயை அதிகபட்சமாக 3 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றும், முடிந்தவரை ஒருமுறை பொரித்த எண்ணெயை மறுபடியும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் FSSAI கேட்டுக்கொண்டுள்ளது. அளவான எண்ணெய் பயன்பாடு மற்றும் நீராவியில் வேகவைத்த உணவுமுறைகளைப் பின்பற்றுவது நீண்டகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்றும் FSSAI தெரிவித்துள்ளது