மதுரையின் ஜீவநாதியான வைகை ஆற்றைப் பாதுகாக்கவும், அதனை மீட்டெடுக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே (ராஜ் பவன்) நேரடியாகக் களமிறங்கும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிரடியாக எச்சரித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு, கழிவுகள் கொட்டப்பட்டு அவலநிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஆளுநரின் இந்த “நேரடி களமிறங்கும்” பேச்சு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலையும், ஆளும்கட்சியான தவெக (TVK) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விழாவில் பேசிய ஆளுநர் அர்லேகர், “மதுரையில் வைகை என்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆறு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதில் இன்று நீர் இல்லை. வெறும் மணலும், வறண்ட நிலமுமாக, குப்பைகளின் புகலிடமாகவே அது காட்சியளிக்கிறது. இந்த அவல நிலையை அப்படியே விட்டுவிட முடியாது. வைகை ஆற்றை மீட்டெடுக்கும் பணியைத் தங்களது கைகளில் எடுக்குமாறு மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒருவேளை இந்தச் சீரமைப்புப் பணிகளைப் பொதுமக்களோ அல்லது சமூக அமைப்புகளோ, அரசோ முன்வந்து செய்யத் தவறும்பட்சத்தில், ஆளுநர் மாளிகை நிச்சயம் இந்தச் சீரமைப்பு முயற்சியை நேரடியாக முன்னெடுக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
ஆளுநரின் இந்தச் பேச்சுக்குத் தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “தமிழ்நாடு ஆளுநர்களை முறியடித்த மண், முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேட்டுப் பாருங்கள்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் போது, அதற்குப் போட்டியாக இணையான அதிகார மையத்தை (Parallel Government) நடத்த ஆளுநர் மாளிகை முயல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஆளுநரின் இந்த அத்துமீறலைத் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது” என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அண்மையில் ஆளுநர் அர்லேகர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தார். ஆனால், தற்பொழுது வைகை ஆற்றின் தூய்மைப் பணியை முன்வைத்து, கோட்டை நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்குள் ராஜ் பவன் நேரடியாகத் தலையிடப் போவதாக விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, தவெக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான முதல் பகிரங்க மோதலாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் தென் மாவட்டங்களில் ஆளுநருக்கு எதிரான அரசியல் போரட்டங்கள் வெடிக்கக்கூடும் என உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.