பிரிட்டனில் 18 வயதான பல்கலைக்கழக மாணவர் ஹென்றி நோவாக் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கின் குற்றவாளியான விக்ரம் திக்வா (23), தனக்குத்தானே குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்றும் அவரது சகோதரர் அவருக்கு வழிகாட்டிய அதிர்ச்சியளிக்கும் ரகசிய உரையாடல் டிரான்ஸ்கிரிப்ட் (Transcript) வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த சில நாட்களில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, போலீஸ் வாகனத்தில் வைத்து விக்ரம் திக்வா மற்றும் அவரது சகோதரர் குர்பிரீத் இடையே நடைபெற்ற இந்த உரையாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பை அரசு வழக்கறிஞர் அலுவலகம் (CPS) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்த ரகசிய உரையாடலில், “நீ என்ன செய்தாய்?” எனச் சகோதரன் குர்பிரீத் கேட்க, விக்ரம் திக்வா தான் ஹென்றியின் முகத்திலும், தோள்பட்டையிலும், நெஞ்சிலும் கத்தியால் குத்தியதை நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி, தான் பயன்படுத்திய கொலை ஆயுதமான பிரம்மாண்ட ‘இந்தோ-பெர்சியன்’ கத்தியைக் குறிப்பிடாமல், அது சீக்கிய சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் சிறிய ‘கிர்பான்’ (Kirpan) அல்லது ‘தோரி’ (Dori) என்று வழக்கறிஞரிடம் பொய்யாகக் கூறுமாறு சகோதரன் வழிகாட்டியதும் அந்த உரையாடலின் மூலம் அம்பலமாகியுள்ளது.
மேலும், கொலையிலிருந்து தப்பிப்பதற்காகச் சட்டரீதியான தற்காப்பு வாதங்களை முன்வைக்குமாறும் அவரது சகோதரர் யோசனை கூறியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “நீ பயந்துவிட்டாய் என்றும், தற்காப்பிற்காகவே (Self-defence) கத்தியைப் பயன்படுத்தினாய் என்றும் நீதிமன்றத்தில் கூறு” என அவர் போதித்துள்ளார். ஹென்றி நோவாக் தம்மைக் தாக்கியதாகவும், இனவெறிச் சொற்களைப் பேசியதாகவும் சம்பவ இடத்திலேயே விக்ரம் திக்வா பொய்யானப் புகாரைக் கூறி, ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிய மாணவன் ஹென்றியைக் காவல்துறையினரிடம் கைது செய்ய வைத்த கொடூரமும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த வாதங்கள் மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்ற விசாரணையில் முறியடிக்கப்பட்டு, விக்ரம் திக்வாவிற்கு 21 ஆண்டுகள் வரை பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்திலிருந்து கொலை ஆயுதத்தை மறைத்த அவரது தாயார் கிரண் கவுருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் குடும்பத்தினர் திட்டமிட்டு ‘இனவெறி அட்டையை’ (Race Card) பயன்படுத்தித் தப்பிக்க முயன்ற அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகிப் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.