ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 27 இந்திய மாலுமிகளுடன் பயணித்த ‘எம்.டி லூயிஸ் 1’ (MT LOUISE 1) என்ற பனாமா கொடி பொருந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது வெடிபொருட்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிய படகில் வந்த நபர்கள் கப்பலின் அடிப்பகுதியில் ‘லிம்பெட் மைன்’ (Limpet mines) எனப்படும் காந்த வெடிபொருட்களைப் பொருத்தியதால், கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் துரிதமாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததால், அனைவரும் எவ்விதக் காயமும் இன்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து எஞ்சின் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, கப்பல் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகக் கப்பல் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கடல் பகுதியில் எவ்வித எண்ணெய் கசிவோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என்றும் சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், சிறிய படகில் வந்து வெடிபொருட்களைப் பொருத்தித் தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இச்சம்பவம் குறித்துப் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகளும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். நிலைமையை இந்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். இதே நீரிணைப் பகுதியில் முந்தைய நாளும் இரண்டு இந்திய மாலுமிகளுடன் சென்ற மற்றொரு கப்பல் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அனைத்து மாலுமிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது வணிகக் கப்பல் நிறுவனங்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அப்பகுதியில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.