இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2027) போட்டியின் வரவிருக்கும் பருவத்திற்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக மூத்த வீரர் ரோஹித் சர்மா மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக மீண்டும் ரோஹித் சர்மாவைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்த அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. ஹார்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடந்துபோன தொடர்களில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இருப்பினும் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹார்திக் பாண்டியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது மும்பை அணியின் பயிற்சிப் பணியாளர்களில் (Coaching Staff) பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அணியின் அனுபவம் வாய்ந்த தலைவரான ரோஹித் சர்மாவை மீண்டும் தலைவராக்க யோசனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தலைமை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. அதேவேளையில், ஹார்திக் பாண்டியாவை வேறு அணிகளுக்கு மாற்றுவது (Trade) குறித்தும் அல்லது ரோஹித்தின் தலைமையில் அவர் தொடர்ந்து விளையாடுவது குறித்தும் பேச்சுகள் நடந்து வருவதாகச் விளையாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ரோஹித் சர்மாவின் மீள்வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் எனக் கருதப்படுகிறது.
தற்போது ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் ஏலத்திற்கான பூர்வாங்க பணிகளில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அணியின் கேப்டன் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.