கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள டெங்கானிக்கோட்டை வனப்பகுதி அருகே, பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடூரக் குற்றவாளியைப் பிடிப்பதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கானிக்கோட்டை எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அந்த 8 வயதுச் சிறுமி வழக்கம்போலப் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, வழியில் மறைந்திருந்த நபர் ஒருவர் சிறுமியை வழிமறித்து வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்றுள்ளார். அங்குச் சிறுமிக்குக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை அளித்துவிட்டு, குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
வீட்டிற்குத் திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தைத் தனது பெற்றோரிடம் கூறவே, உடனடியாகச் சிறுவர் உதவி மையத்திற்கு (Child Helpline – 1098) தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சி.தினேஷ் குமார் உத்தரவின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு உடனடியாக டெங்கானிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிறுமி மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் நடந்த இடத்தைக் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உடனடியாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.