Posted in

அமைச்சர் ரமேஷின் வித்தியாசமான பரிசு; சமூக வலைத்தளங்களில் வெடித்த விவாதம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளம் அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ், தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அவர் முதல்வருக்கு வழங்கிய பிறந்தநாள் பரிசுகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும், தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களிலும் ஒரு புதிய விவாதத்தையும், பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

வழக்கமாக, தமிழகத்தில் முதலமைச்சர்களை அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் சந்திக்கும் போது, தங்களது துறை சார்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அல்லது மங்களகரமான பொருட்களை நினைவுப் பரிசாக வழங்குவதே நீண்டகால மரபாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு, பகுத்தறிவுப் பாதையைப் பின்பற்றிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு சந்திக்கும் போது கூட, துறை சார்ந்த பூரண கும்பம், கோவில் பிரசாதங்கள் அல்லது சாமி சிலைகளையே பரிசளிப்பார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி காலத்திலும் இதே ஆன்மீக மரபே தொடர்ந்தது.

ஆனால், தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் விஜய்க்கு அன்னை மரியாவின் (மாதா) சிலை ஒன்றையும், தீவிர கடவுள் மறுப்பாளரான ஈ.வெ.ராமசாமியின் சிந்தனைகள் அடங்கிய ‘உலக சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார்’ என்ற புத்தகத்தையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையைக் கவனிக்கும் ஒரு பொறுப்புமிக்க அமைச்சர், இந்து மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களைக் கொண்ட பெரியாரின் புத்தகத்தையும், மாற்று மத வழிபாட்டுச் சிலையையும் முதல்வருக்குப் பரிசளித்தது ஆன்மீகவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்தச் செயல்பாடு குறித்து இந்து மத அமைப்புகள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்து கோவில்களை நிர்வாகிக்கும் துறையின் அமைச்சர், தனது துறைசார்ந்த மரபுகளை மீறிச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், தவெக தரப்பிலோ இது முதலமைச்சரின் தனிப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துச் சந்திப்பு என்றும், இதில் அனைத்து மத நல்லிணக்கமும், பகுத்தறிவுச் சிந்தனையுமே பிரதிபலிக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.