உலகளவில் ஆண்டிற்கு அதிகளவில் பாம்புக்கடி சம்பவங்கள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச அறிவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவக் கல்லூரி (Liverpool School of Tropical Medicine) மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இணைந்த நடத்திய இந்த விரிவான ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.09 லட்சம் முதல் 13 லட்சம் (1.3 million) மனிதர்கள் பாம்புக்கடித் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
‘பிஎல்ஓஎஸ் மெடிசின்’ (PLOS Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், உலகளவில் ஆண்டிற்கு 21 லட்சம் முதல் 70 லட்சம் பேர் வரை பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள். இதில் மொத்தப் பாதிப்புகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான சம்பவங்கள் இந்தியா உட்பட வெறும் 20 நாடுகளில் மட்டுமே நிகழ்கின்றன. பட்டியலில் நைஜீரியா 6.66 லட்சம் சம்பவங்களுடன் இரண்டாம் இடத்திலும், இந்தோனேசியா 4.90 லட்சம் சம்பவங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கிராமப்புறப் பகுதிகள், விவசாய நிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் திறந்தவெளியில் நடமாடுபவர்களே அதிகளவில் பாம்புக்கடிக்கு இலக்காகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவில் நல்நல்லாம்பு (Cobra), கண்ணாடி விரியன் (Russell’s Viper), கட்டுவிரியன் (Krait) மற்றும் சுருட்டை விரியன் (Saw-scaled Viper) ஆகிய நான்கு முக்கிய நச்சுப் பாம்புகளாலேயே அதிகளவிலான கடியும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும், போதுமான முதலுதவி விழிப்புணர்வு இன்மையும், கிராமப்புறங்களில் சரியான நேரத்தில் ‘ஆன்டி-வெனம்’ (Anti-venom) மருந்து கிடைக்கப் பெறாததுமே உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைகிறது.
பாம்புக்கடியை ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாகக் (Public Health Issue) கருதி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) 2030-க்குள் பாம்புக்கடி உயிரிழப்புகளைப் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்தியாவில் கிராமப்புற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், மருத்துவமனைகளில் போதுமான நச்சுமுறிவு மருந்துகளைச் சேமித்து வைத்தல் மற்றும் சரியான நேரடி மருத்துவச் சிகிச்சைகளை உறுதி செய்வது அவசியமாகும்.