Posted in

ஹார்மூஸ் நீரிணையைத் திறக்க 6 கடுமையான நிபந்தனைகள்! – ஈரானின் கெடுபிடியால் அதிர்ச்சியில் அமெரிக்கா!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் போக்குவரத்தின் முக்கிய நரம்பாகத் திகழும் ஹார்மூஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்க வேண்டுமானால் அமெரிக்கா தங்களது 6 முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, சர்வதேச அளவில் ஏற்கனவே நிலவி வரும் ஆற்றல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்க நிர்வாகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் டென்ஷனையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் விதித்துள்ள 6 நிபந்தனைகளில்: ஈரானின் ஆன்மீக மற்றும் தேசியத் தலைவர்கள் மீதான அச்சுறுத்தல்களை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், யேமன், ஈராக் மீதான ராணுவத் தாக்குதல்களை நிரந்தரமாகக் கைவிட வேண்டும், நீரிணையைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து அமெரிக்கக் கடற்படை மற்றும் வான்படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் ஆகியவை முதன்மையானவை. மேலும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பிரம்மாண்ட இழப்பீடு வழங்கி, ஈரானுக்கு எதிரான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்கி, முடக்கப்பட்ட ஈரானியச் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ராணுவ மோதல்களைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துச் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தைத் தடுத்து வருகிறது. ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் தற்காலிகக் கப்பல் பாதைகளை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தபோதிலும், அமெரிக்கா தங்களது 6 முதன்மைக் கோரிக்கைகளை ஏற்கும் வரை நீரிணையை முழுமையாகத் திறக்கப் போவதில்லை என்பதில் ஈரானியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) மிக உறுதியாக உள்ளது.

ஈரானின் இந்த அதிரடிக் கெடுபிடி குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். உலக அளவில் விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெயில் பெரும் பகுதி இந்த குறுகிய கடல் வழியே பயணிப்பதால், நீரிணை தொடர்ந்து முடங்குவது சர்வதேச அளவில் எரிபொருள் விலையை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா அல்லது பிராந்தியத்தில் ராணுவ அழுத்தத்தை மேலும் அதிகரிக்குமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.