வடக்கு குவைத்தில் அமைந்துள்ள சீன முன்னணி நிறுவனம் ஒன்றின் கட்டிடத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் கொடூர தாக்குதலில் நிறுவனத்தின் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் சவூத் அப்துல்அஜீஸ் அல்-அத்வான் இதுகுறித்து தெரிவிக்கையில், “நாட்டின் வட பகுதியில் அமைந்திருந்த சீன நிறுவனத்தைக் குறிவைத்து ஈரான் மேற்கொண்ட இந்த கொடூர அத்துமீறலில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதுடன், கட்டடத்திற்குப் பலத்த பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடந்த உடனடியாக மீட்புக் குழுக்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் ஆதரவு பெற்ற பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சீன உள்கட்டமைப்பு மையம் மீது இந்தத் தாக்குதல் விழுந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தங்களின் ஆயுதப் படைகள் முழுச் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு ராணுவம் உறுதியளித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைமுகாம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது நடத்திய பலத்த தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள வணிக மற்றும் உள்கட்டமைப்பு மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் பரவி வருவதால், சர்வதேச வர்த்தகமும் பாதுகாப்புச் சூழலும் மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.