Posted in

“உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது!” அதிபர் டிரம்பின் மகள் இவான்காவைக் கொல்ல ஈரான் ஆதரவு பயங்கரவாதி சதி திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகளான இவான்கா டம்பைக் (Ivanka Trump) குறிவைத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு ஒன்று கொடூரமான முறையில் படுகொலை செய்யச் சதி திட்டம் தீட்டியிருந்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், ஈரானிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதற்குப் பழிவாங்கும் நோக்கில், டிரம்பின் குடும்பத்தினரை நரபலி கொடுக்க இந்தச் சர்வதேச சதி வலை பின்னப்பட்டுள்ளது அமெரிக்க உளவுத்துறையால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரமான கொலைத் திட்டத்தின் பின்னணியில், ஈரானின் ஆதரவு பெற்ற ‘கதாயிப் ஹெஸ்புல்லா’ (Kata’ib Hezbollah) என்ற பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவனான முகமது பாகர் சாத் தாவூத் அல்-சாதி (Mohammad Baqer Saad Dawood Al-Saadi – 32) என்ற ஈராக் நாட்டவன் செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் (New York Post) ஊடகம் வெளியிட்டுள்ள உளவுத்துறை அறிக்கையின்படி, இவான்கா டம்ப் மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் வசித்து வரும் புளோரிடாவில் உள்ள 24 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பர இல்லத்தின் வரைபடத்தை (Blueprint) இந்த பயங்கரவாதி தனது வசம் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அல்-சாதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இவான்காவின் புளோரிடா வீட்டின் வான்வழி வரைபடப் படத்தை பகிர்ந்து, அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அமெரிக்கர்களே, இந்தப் படத்தைப் பாருங்கள்; உங்களுடைய மாளிகைகளோ அல்லது அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் படையோ (Secret Service) உங்களைக் காப்பாற்ற முடியாது; நாங்கள் தற்போது உங்களைக் கண்காணித்து ஆய்வு செய்யும் கட்டத்தில் இருக்கிறோம்; எங்களின் பழிவாங்கல் என்பது வெறும் காலத்தின் கட்டாயம் மட்டுமே!” என்று மிகக் கொடூரமான முறையில் எச்சரித்துள்ளார். “சுலைமானியைக் கொன்று எங்கள் வீட்டை எரித்த டிரம்பின் வீட்டை எரிக்க, நாம் இவான்காவைக் கொல்ல வேண்டும்” என்று அவன் ரகசியமாகக் கூறி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் அமெரிக்க மற்றும் யூத இலக்குகளுக்கு எதிராக சுமார் 18 பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருங்கிணைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அல்-சாதி, அண்மையில் துருக்கியில் வைத்து சர்வதேசப் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார். தற்போது அவர் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் (MDC Brooklyn) தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவான்கா மீதான இந்த கொலைச் சதி அம்பலமானதைத் தொடர்ந்து, ஈரான் மீதான புதிய ராணுவத் தாக்குதல்களுக்கு டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.