சென்னை ராயபுரத்தில் திருமண மண்டபம் ஒன்றின் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் முதியவர் ஒருவரைத் தாக்கியதோடு, தவெக சட்டமன்ற உறுப்பினருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் (Inspector) சிதம்பர பாரதி உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய பொறுப்புகள் ஏதுமின்றி காத்திருப்போர் பட்டியலுக்கு (Vacancy Reserve) மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாகப் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம் மேற்கு மாதா சர்ச் சாலையில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, மணமகன் சையத் இப்ராஹிம் என்பவர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்வதாகக் கூறி, 27 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் மண்டபத்தின் முன்பு திரண்டு வந்து “நீதி வேண்டும்” என்ற பதாகைகளுடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் போலீஸார், அந்தப் பெண்ணிடமும் அவருடன் வந்தவர்களிடமும் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையின் போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்த முதியவர் மற்றும் சமூக ஆர்வலர்களை ஆய்வாளர் சிதம்பர பாரதி ஒருமையில் பேசி, ஒரு கட்டத்தில் முதியவர் ஒருவரைப் பொதுவெளியில் வைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ விஜய் தாமு, “பொதுமக்களை நடுரோட்டில் அடிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?” என்று ஆய்வாளரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதனால் தவெக எம்.எல்.ஏ-விற்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே காவல் நிலைய வளாகத்தில் கடுமையான வார்த்தைப் போர் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி முதியவரைத் தாக்கிய கொடூரமான காட்சியும், தவெக எம்.எல்.ஏ விஜய் தாமுவுடன் அவர் மோதலில் ஈடுபட்ட வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவின. காவல்துறையினரின் இத்தகைய ஒருதலைப்பட்சமான மற்றும் அத்துமீறிய நடவடிக்கை குறித்துப் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி எழுந்த நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆய்வாளர் சிதம்பர பாரதியை உடனடியாக ஆயுதப்படை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.