ஜப்பான் நாட்டின் ஓசாகா நகரில் உள்ள பச்சிங்கோ (Pachinko) சூதாட்ட மற்றும் விளையாட்டு அரங்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு பெற்றோலை ஊற்றித் தீவைத்து, 5 பேரைக் கொடூரமாகக் கொன்ற குற்றவாளி சுனாவோ தகமிக்கு (Sunao Takami) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 58 வயதான சுனாவோ தகமியின் மரண தண்டனை, தூக்கிலிடுதல் முறை மூலம் நிறைவேற்றப்பட்டதாக ஜப்பான் நாட்டின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஓசாகாவில் உள்ள பச்சிங்கோ அரங்கிற்குள் நுழைந்த சுனாவோ தகமி, தரையில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தார். இந்த கொடூர சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 4 வாடிக்கையாளர்கள் மற்றும் ஒரு ஊழியர் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். வேலையிழப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணையில் 2011-ஆம் ஆண்டு ஓசாகா மாவட்ட நீதிமன்றம் சுனாவோ தகமிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. குற்றவாளியின் தரப்பில் மனநல பாதிப்பைக் சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்யப்பட்ட போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஜப்பான் உச்ச நீதிமன்றம் 2016-ஆம் ஆண்டு மரண தண்டனையை உறுதி செய்தது.
ஜப்பானில் புதிய பிரதமர் சனே தக்காச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்டுள்ள முதல் மரண தண்டனை இதுவாகும். ஜி-7 (G7) கூட்டமைப்பு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே இன்னமும் மரண தண்டனை நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.