Posted in

பி.சி.ராய் போல நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் – சட்டப்பேரவையில் கச்சத்தீவு குறித்து நிர்மல் குமார் அதிரடி பேச்சு!

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட வரலாற்றுச் சம்பவம் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான காரசார விவாதம் வெடித்தது. விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “மேற்கு வங்கத்தில் பேருபாரி பகுதியை ஒன்றிய அரசு இலங்கைக்கு நிகராக அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்குக் கொடுக்க முயன்றபோது, அம்மாநில முதலமைச்சராக இருந்த பி.சி.ராய் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்தார்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி நினைத்திருந்தால் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும் என்று நிர்மல் குமார் அவையில் குற்றம்சாட்டினார். அப்போதைய ஒன்றிய அரசு கச்சத்தீவை வழங்க முயன்ற போது, வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் கேவல் சிங் ஆகியோர் முதலமைச்சருடன் ஆலோசித்த வரலாற்று ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்பதால் உடனடியாகச் சட்டப்பேரவையைக் கூட்டி அவசரத் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் எனக் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சிற்கு அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. திமுக தரப்பில் மூத்த தலைவர்கள் உடனடியாகப் பதிலடி கொடுத்துப் பேசுகையில், “கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தன் எதிர்ப்பை எப்போதும் வலுவாகவே பதிவு செய்துள்ளது; மாவட்டத் தலைநகரங்களில் கண்டனக் கூட்டங்களை நடத்தி பேரவையிலும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், பிரதமர்களுக்குத் தொடர்ச்சியாகக் கடிதங்களும் எழுதப்பட்டன” என்று விளக்கி அமைச்சரின் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
கச்சத்தீவு விவகாரத்தில் அன்றைய அரசுகளின் நடவடிக்கைகள் மற்றும் வரலாற்று முடிவுகள் குறித்துத் தொடர்ச்சியாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் தற்காலிகப் பரபரப்பு நிலவியது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமை சார்ந்த கச்சத்தீவு பிரச்சனை, தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் பிரதான அரசியல் தலைப்பாக உருவெடுத்துள்ளது.