முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக (PSO) பணியாற்றிய காவல் அதிகாரி சி. கணேசன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடரப்பட்ட 14 ஆண்டுகால ஊழல் வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தற்பொழுது அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த நில ஒதுக்கீடு பரிவர்த்தனைகள் அனைத்தும் நடந்துள்ளதால், இவ்வழக்கு சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, சென்னை முகப்பேர் ஏரித் திட்டப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் (TNHB) உயர்வருவாய் பிரிவுக்கான 4,370 சதுர அடி (சுமார் 10 சென்ட்) கொண்ட காலி மனை ஒன்று, ‘நேர்மையான அரசு ஊழியர்’ என்ற அரசாங்கத்தின் சிறப்பு விருப்புரிமை ஒதுக்கீட்டின் (GDQ) கீழ் கணேசனுக்கு provisional allotment ஆக வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு அப்போதைய வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், உரிய அனுமதியின்றி அந்த நிலம் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் மூலம் விற்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாகவும் கூறி கடந்த 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நீண்டுகொண்டே சென்ற நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அரசுத் தரப்பு சாட்சிகள் எவரும் சதி அல்லது முறைகேடு நடந்ததாகக் கூறவில்லை என்பதைக் குறிப்பிட்டதோடு, போலீஸ் நடத்தை விதிகளின் படியே உரிய அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றே கணேசன் நிலத்தை விற்றுள்ளார் என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியைச் சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில், தற்போது முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி கணேசன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான ஒட்டுமொத்தப் புகார்களும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகத் தொங்கி நின்ற இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் வழக்கு, தற்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது கோட்டை மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.